ஓடும் சக்கரத்திற்கு அச்சாணியை போல், பூவிற்கு தேனியை போல், மனதிற்கு அமைதியை போல் மனிதனுக்கு குடும்பம் அமைந்துள்ளது. ஐந்து அறிவு பிராணிகளும் உள்ளங்கையில் அடங்கக்கூடிய பறவைகளும் கூட குடும்பமாக வாழ, மனிதனுக்கு அது ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு கூட்டுக்குடும்பமாக வளர்ந்தவர்களின் மனோபாவம் பக்குவம் அடைந்ததாகவும், விட்டுக்கொடுக்கும் தன்மையை குழந்தைகள் தாங்களாகவே வளர்த்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட குடும்பம் ஒரு சிறிய சிறந்த சமுதாயமாக விளங்கியது.
இன்று பெற்றோர், இரண்டு பிள்ளைகள் மட்டும் வாழும் சிறு குடும்பத்தை ஆளுக்கொரு கைபேசியோ மடிக்கணினியோ பிரித்து வைத்துள்ளது. கணவன் எந்த அறையில் இருக்கிறார் என தேடும் மனைவி, பிள்ளைகள் நாள் முழுக்க கைபேசியில் மூழ்கி இருப்பதை கவனிக்க தவறுகிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரையும் இணைத்து வைக்கிறது இணைய இணைப்பு. உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தையிடம் தாய் கைபேசியை கொடுத்து விட்டால் அது அமைதியாக உண்ணும். கைப்பேசிகள் குழந்தை பருவம் முதலே நம்மை எப்படி கட்டுப்படுத்தி வருகிறது என பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுகிறோம். குடும்பம் ஆதிகாலத்திலிருந்தே சமுதாய அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல கூட்டுக் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்த போது, அது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கியது. பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பெரியோரிடம் மரியாதையாக உரையாடுவது, உறவுகளை பேணுதல் போன்ற இன்னும் பல நல்ல பழக்கவழக்கங்கள் பொதுவாக காணப்பட்டது. என்று குடும்ப அமைப்பு சுருங்க ஆரம்பித்தோ இந்த சால சிறந்த பண்புகள் அரிதாயின. குடும்பம் கற்றுக்கொடுக்க தவறிய
சில நற்பண்புகள் இன்று மக்களிடையே அழியும் விளிம்பில் உள்ளது.
குடும்பம் வலுவாக இருந்தாலே ஒழிய ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களும் பெற்றோர்களும் குழந்தைகளும் பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு ஆரோக்கியமான தொடர்பு இருக்கவேண்டும். இந்த தொடர்பு ஏற்பட முதலில் நல்ல பிணைப்பு இருக்க வேண்டும். வீட்டில் பெரியோர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வர். அந்த கண்டிப்பு இல்லை
எனில் பிள்ளைகள் எல்லை மீறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குழந்தைகள் வளர்ந்து பருவ வயதை கடக்கும் வரை பெற்றோர்களுக்கு ஒவ்வொரு தினமும் சவாலாகவே அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் வாழும் குழந்தைகளின் எதிர்பார்ப்பும் தேவையும் சற்று அதிகம் உள்ளதாகவே தென்படுகிறது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய பெற்றோர்கள் வேலை வேலை என ஓடி அலைய பிள்ளைகள் அவர்களின் கடின உழைப்பை பொருட்படுத்தாமல் அவர்கள் பட்டியலை நாளுக்கு நாள்
அதிகமாக்கிக் கொண்டே போகின்றனர். பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து பழக்கிவிடும் பெற்றோர்கள் சில நேரங்களில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றால் அந்த பிள்ளைகள் அடம்பிடித்து வீட்டையே போர்க்களம் ஆக்கிவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாமை. பிள்ளைகளின் அனைதத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் மிக அவசியமான தேவையை தர மறுக்கின்றனர். அதுதான் நேரம்!
பிள்ளைகளுடன் சிறிது நேரம் உட்கார்ந்து அந்த நாள் எப்படி கழிந்தது எனக் கேட்க கூட நேரமில்லை சில பெற்றோர்களுக்கு. இதனால் பிள்ளைகள் அவர்களின் பாச வார்த்தைகளுக்காகவே ஏங்குகின்றனர். சில பிள்ளைகள் வீட்டில் பெற்றோர் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அவர்கள் விழித்திருக்கும் நேரம் முழுக்க கைபேசியில் மட்டுமே உறவாடுகின்றனர். இதனால் உடலில் பல உபாதைகள் சிறு வயதிலிருந்தே ஏற்படுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு தான் நேரம் ஒதுக்கவில்லை என்றால் வாழ்க்கை துணைக்கும் நேரம் சரிவர தருவதில்லை. இப்படியாக மனிதனின் இயந்திர வாழ்க்கை குடும்பத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது. இவ்வாறாக வளரும் குழந்தைகளின் தன்மைகளில் சற்று தளர்வு உள்ளது.
குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள் மட்டும் உறுப்பினர் அல்லர். மாறாக தாத்தா, பாட்டி பெற்றோர்களின் உறவுகள் என அனைத்தும் சேர்ந்ததுதான் குடும்பம். ஒருவர் தன் உடன்பிறப்புகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும் ஒரு வாரத்திற்கோ இரண்டு நாட்கள் முன்னதாகவோ அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய வேண்டிய அவலநிலையை நாமே உருவாக்கி விட்டோம். வருடத்திற்கு ஒரு தடவை அல்லது திருமண விழாக்களில் மட்டுமே உறவுகளை காட்டி "இதுதான் உன் மாமா", "இவர் தான் உன் சித்தி" என்று அறிமுகப்படுத்திவிட்டு குழந்தைகள் அனைவரையும் ஒன்றாக விளையாட சொல்லும் பெற்றோர் அனைத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு கைபேசியில் விளையாடுவதை கண்டும் காணாமலும் இருக்கின்றனர். குடும்ப உறவுகள் பிற்காலத்தில் வலிமையற்றதாக இருக்க மூல காரணத்தை சரி பார்க்க தவறுகிறோம். இறைவன் நம் இல்லங்களில் அமைதியை ஏற்படுத்தி உள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இன்று நம்மில் பலர் வீட்டிற்குள் செல்வது தான் தாமதம். சண்டையிட்டு சண்டையிட்டு அனைவரின் நிம்மதியையும் குலைத்து விடுகிறோம்.
பல குடும்பங்கள் வாழும் இடத்தில் தான் ஒரு சமுதாயம் உருவாகிறது. இன்றைய குடும்பங்களின் நிலையை ஓரளவுக்கு ஆராய்ந்து இருக்கும் நிலையில் சமுதாயத்தின் நிலையை நம்மால் கணிக்க முடிகிறது. பெரும்பாலானவர்களின் வார்த்தைகள் "அந்த காலத்தில் வாழ்ந்த மக்களை போல இக்கால மக்கள் இல்லை" என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை, தங்கள் குழந்தைகள் செய்தால் தவறில்லை பிறர்
குழந்தைகள் செய்தால் தவறு என்ற மனோபாவம் பெற்றோர்களிடையே பரவலாக உள்ளது. அண்டை வீட்டாருடன் பழக யோசிக்கும் குடும்பங்கள் பல்கி பெருகி விட்டன. இது நம் சமுதாயத்தின் பலவீனத்தையே குறிக்கிறது.
இன்றைய சமுதாயம் தான் நம் குழந்தைகளை வளர்க்கிறது. சமுதாயம் உறுதியாக இருந்தால் மட்டுமே நம்நாடு உறுதியான வேரோடு நிற்கும். நம் இந்திய நாட்டிற்கு ஆயிர வருட வரலாறு உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சமுதாயங்கள் வாழ்ந்தன. அவ்வழியே வந்த நாம் இன்று வலுவான தேசத்தை கட்ட கடமைப்பட்டுள்ளோம். இந்த பரந்திருக்கும் நிலத்தில் எத்தனையோ சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்கள்
யாவருள்ளும் வித்தியாசங்கள் உள்ளது. ஆனால் அது எதுவும் நம்மில் வேற்றுமையை நிலை நிறுத்துவதில்லை. ஏனென்றால் நம் பண்டைய சமூக மக்கள் அப்படி வாழவில்லை; நாமும் அதை கடைப்பிடிக்கவில்லை. இதே போல தான் நம் இளைய சமுதாயத்தினரும் கட்டமைக்கப்பட வேண்டும். நம் சமுதாயத்தை பல மோசமான கூறுகள் சீர்குலைக்கிறது. அவற்றை களைந்தால் மட்டுமே நம் தேசத்தின் வேறை உறுதிப்படுத்த முடியும்.
ஒரு தேசத்தின் கிளைகளாக இருக்கும் இளைஞர்கள் சமூகத்தின் மேல் அக்கறை எடுத்துக்கொள்வது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. நம் நாட்டில் நிறைய பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். முளைத்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினரும் விழித்துக்கொண்டு நம் நாட்டை நல்ல பாதையை நோக்கி செலுத்த வேண்டும். அண்டை நாடுகள் மட்டும் தான் நம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க துடிப்பாக செயல்படுகின்றனர் என்று எண்ணிக் கொண்டு இருந்தால் அது தவறு. சொந்த மண்ணில் உள்ளவர்களும் அந்நிய சக்திகளாக உருவெடுத்துள்ளனர். இன்று பல இளைஞர்கள் வெவ்வேறு துறையில் இந்திய மண்ணில் சாதனை புரிந்து வருகின்றனர். சிறுவர்களும் இதில் அடங்குவர் ஆனால் இவர்களில் சிலர் ஆராய்ச்சி மேற்கொள்ள போதிய நிதி இன்றி மிகுந்த சிரமத்தை மேற்கொண்டு தான் அவர்களுடைய படைப்புகளை வெளியே கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களில் வெகு சிலருக்கே அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு பெரும் பகுதியினர் தங்களின்
ஆராய்ச்சியை பாதியிலேயே விட்டு விடுகின்றனர் ஆராய்ச்சித் துறையில் மட்டும்தான் இப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தால் அதுவும் தவறுதான். இந்திய மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் அதிரடியாக சாதனைகளை குவிக்கின்றனர். தேசத்திற்காக விளையாடுவதற்கு அயராது பாடுபட்டு உழைக்கும் அவர்களில் சிலர் நிதி இன்றி தங்கள் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகாமலே புதைத்து விடுகின்றனர். நம் நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்க விடாமல் இவற்றுக்கு தடையாக இருக்கும் பல காரணிகளைக் கூறலாம். அவற்றை போராடி களைந்து எறிவது நம் சமுதாயத்தின் கடமை.
நாடு வலிமையாக வேண்டுமென்று நாவால் மொழிந்தால் மட்டும் அது நடந்துவிடாது. உள்ளத் தூய்மையுடன் அதற்கான செயல்பாட்டில் இறங்க வேண்டும். அது மாற வேண்டும் இது மாற வேண்டும் என்று பேசி பேசி கழித்த நாட்கள் பல. முதலில் மாற்றத்தை நம்மில் இருந்து வெளிப்படுத்த வேண்டும். இறைவன் கூறுகிறான், "மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விளக்குகிறீர்கள்"….(திருக்குர்ஆன் 3:110). நம் தேசத்தை வலிமையாக்க இந்த தீர்வு ஒன்றே இன்றியமையாததாகும். குடும்பம் சமுதாயம் தேசம் என எந்த இடத்திலும் இதனை எளிமையாக செயல்படுத்த முடியும். நல்லதை ஏவுவதற்கும் தீயதை தடுப்பதற்கும் எந்த தேவையும் இல்லை, தைரியத்தை தவிர. ஒருவர் ஒரு அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தால் நம்மால் முடியவில்லை எனில் அவருக்கு ஆதரவாக நிற்கலாம். சமுதாயத்தில் கேள்வி கேட்பவர்கள் வெகுசிலரே. ஆனால் அதை அலசி ஆராய ஒரு கூட்டமே கூடி விடும். ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் மட்டுமே நம்மால் ஒரு வலிமையான தேசத்தை உருவாக்கும் பாதையில் பயணிக்க முடியும்.
வலிமையான தேசம் என்றால் எதிரிகள் எப்போது தாக்கினாலும் போராடுவதற்கு தயாராக இருப்பது அல்ல மாறாக, நம்மில் ஒருவரை ஏளனப்படுத்தினாலும் கூட நம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். நம் நாட்டில் எந்த துறையில்தான் மக்கள் சாதனைகளை வெளிக்கொண்டு வரவில்லை. அறிவியல் முதல் தொல்லியல் வரை தினந்தோறும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் பெருகிக்கொண்டே
போகின்றன. எந்த வயதாக இருந்தாலும் சரி எந்த பாலினமாக இருந்தாலும் சரி இதற்கு எல்லைக்கோடு என்று ஒன்று இல்லை. குடும்பம் அழகாக இருந்தால்தான் சமுதாயம் சிறப்பாக விளங்கும், தேசம் வலிமையாக இருக்கும். வலிமையான தேசத்திற்கு ஆணிவேராக இருக்கும் குடும்ப உறவுகளைப் பேணி வலுப்படுத்தினால் தான் அது "வலிமையான குடும்பம் வலிமையான தேசம்" என்ற இலக்கை அடைய வழிவகுக்கும்.
ர. ஆஃப்ரிடா சுலைஹா பீவி
ஜிஐஒ ஊழியர்
08th March, 2021.
Comments