மனித இயல்பு தவறு செய்வது. இப்லீஸ் இறைவனிடம் "நான் மனிதர்களை வழிகேட்டில் வீழ்த்துவேன்" என்று சவாலிட்டதற்கு அல்லாஹ் "அவர்கள் மன்னிப்பு கேட்கும் போதெல்லாம் நான் மன்னித்து கொண்டு இருப்பேன்" என்று பதிலளித்தான். ஒரு முஃமின் ரமலான் மாதத்தை அடைந்துவிட்டால் அவனுடைய முந்தைய வருட பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. நாம் செய்த சிறு, பெறு பாவங்களை பாவமன்னிப்பு கேட்போராயிருப்பின் அல்லாஹ் நம்மை கருணையுடன் மன்னித்துவிடுகிறான். நரக வாயில்கள் மூடியிருக்கும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் கேட்கும் தவ்பாவை அல்லாஹ் மன்னிக்காமல் விட்டுவிடுவதில்லை. தவ்பா கோருவதனால் நம் மனமும் ஆன்மாவும் தூய்மை அடைந்து அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் நெருங்குகிறோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர். ஆனால் நம் இறைதூதர் அவர்கள் ஒரு நாளைக்கு நூறு முறை அஸ்தஃபிருல்லாஹ் கூறி பாவமன்னிப்புத் தேடினார்கள்.
ஏன் குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிகப்படியான பாவ மன்னிப்பில் ஈடுபட வேண்டும்? "ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது" (அல்குர்ஆன்: 2:185) என்று தன் திருமறையில் அல்லாஹ் விவரிக்கிறான். சங்கைமிகு இப்புனித மாதத்தில் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு அவனுடைய உவப்பை அடைய எண்ணற்ற எளிமையான வழிகளை வகுத்துள்ளான். இம்மாதத்தில் நாம் செய்யும் அனைத்து அமல்களுக்கும் அவன் இரட்டிப்பு நன்மை வழங்குகிறான் என்பதை அறவே மறந்து விடக்கூடாது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் இரவை அடைந்த ஒரு முஃமினுக்கு அல்லாஹ்விடமிருந்து வேறு என்ன சிறந்த பரிசு வேண்டும்? "எனவே, உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! பிறகு அவன் பக்கம் மீளுங்கள்! திண்ணமாக, என் இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின்றான்" (அல்குர்ஆன்: 11:90). ரமலான் அல்லாத பிற நாட்களில் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் நிச்சயமாக மன்னித்து விடுகிறான். அதுவே இந்த அருள்வளம் நிறைந்த மாதத்தில் பாவமன்னிப்புக் கேட்டால் அவன் நம்மை மன்னிக்காமல் விட்டுவிடுவதில்லை. பாவமன்னிப்பின் கதவுகள் திறந்திருக்கும் இந்த வளம் நிறைந்த ரமலான் மாதத்தில் வல்ல ரஹ்மான் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள எத்தனை மகத்தான வழிகளை காண்பித்துள்ளான் என்பதை சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
நாம் துஆ கேட்பதற்கு முன் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால் நாம் செய்த பாவங்கள் குவிந்திருக்க நம் துஆக்கள் அல்லாஹ்வை சென்றடைய தடையாய் நிற்கும். இந்த உலகின் தற்காலிக இன்பங்களை அனுபவிக்கும்பால் மனிதன் செய்யும் தவறுகளை சீர்திருத்திக் கொள்ள, பாவமன்னிப்புக் கோர அல்லாஹ் இந்த மாதத்தில் இலேசான வழிபாடுகளையும் காண்பித்துள்ளான். தூய உள்ளத்துடன் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இம்மியளவும் கூட உள்ளத்தின் எந்த மூலையிலும் பாவத்தை செய்யும் எந்த அம்சமும இருக்கக்கூடாது என்ற வகையில் வாய்மையான தவ்பா புரிய வேண்டும். கடலளவு மலையளவு பாவம் செய்திருந்தாலும் நிராசை அடையாமல் அல்லாஹ்வை நம்பி
பாவமன்னிப்பு கேட்க வேண்டும். "உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன்
வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது" (அல்குர்ஆன்: 7:201). பாவமன்னிப்பு கோருகிறோம்; ஆனால் நம் இதயங்கள் நடுங்கி கண்கள் கசிகின்றனவா? உளமார்ந்து பாவமன்னிப்பு கேட்டால் இறையச்சம் அதிகரித்து இறை உவப்பை பெற அல்லாஹ் நமக்கு அருள் புரிவான்.
ர. ஆஃப்ரிடா சுலைஹா பீவி, ஜிஐஓ ஊழியர்.
Pic. Credits: Canva
Date: 06th May, 2021.
Comments