ஆதிகால மனிதன் கட்டமைத்த சமூகம் ஏற்றத்தாழ்வற்ற தொன்மை வாய்ந்த சமூகமாக சிறந்து விளங்கியது. சகாப்தங்கள் செல்ல செல்ல மனிதனுடைய இயற்கை தன்மை பல மாற்றங்களை அடைந்தது. இந்த எதிர்மறையான மாற்றங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் உலக மக்களிடம் அடர்த்தியாக படர்ந்துள்ளது. உலகம் தொழில்நுட்பரீதியாக அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் மனிதனுடைய மனம், எண்ணம் அதைவிட வேகமாக சுருங்கி கொண்டிருக்கிறது. பிறர் நலம் நாடி வாழ்ந்தனர் நம் முன்னோர். அந்த சமுதாயங்களை இன்று நம் பாடப் புத்தங்களில் மட்டுமே படிக்க முடிகிறது. எங்கே சென்றது அந்த சால சிறந்த குணங்கள்?
கொரோனா நோயில் இருந்து பாதுகாப்பு பெற நாம் பல தற்காப்புகளை மேற்கொள்கிறோம். பலர் பல படிகள் மேலாக உறவினர்கள் நண்பர்கள் என யாரையும் வீட்டிற்குள் சேர்க்காமல் அவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தனிமையில் நாட்களை கழித்து சமூகத்தில் இருந்தே இடைவெளி கடைப்பிடிக்கின்றனர். இது சரியான வழிமுறையா? ஆரோக்கியமானதா?
உணவு உடை தங்குமிடம் ஆகியவை மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல சமூக உறவும் முக்கியம். குழந்தைகளை பெற்றோர்கள் மட்டுமே பேணிப் பாதுகாத்து வளர்க்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை அல்ல. குழந்தை வளர்ப்பில் சமூகம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பிள்ளைகள் வெளியே சென்று விளையாடினால் மண், தூசியால் பாதிக்கப்படுவர் என்று பெற்றோர்கள் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை மிகவும் பத்திரமாக வளர்க்கின்றனர். இதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குன்றிக் கொண்டே போகும். வீட்டிற்குள்ளேயே அலைபேசி, வீடியோ கேம்கள், தொலைக்காட்சி போன்றவை அவர்களை முடக்கி விடுகிறது. அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட்டது. சம வயது குழந்தைகள் பெற்றோர்கள், பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அறியாமலேயே பல குழந்தைகள் வளர்கின்றனர். இப்படியாக மணிதன் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திலிருந்து விலகி சென்று கொண்டே இருக்கிறான்.
இதனால் ஏற்படும் விளைவுகளோ எண்ணற்றவை. அந்த காலத்தில் தெருவில் விளையாடும் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் யார் தட்டிக் கேட்டாலும் எவரும் எதுவும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இன்று தன் பிள்ளையை யாரேனும் இப்படி செய்யக்கூடாது என்றோ நல்ல பழக்கவழக்கங்களை எடுத்துக் கூறினாலோ அப்பெற்றோர் தங்கள் குழந்தைகள் எப்படி இன்னொருவர் பேசக் கூடும் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். இப்படியாக யாரும் தங்கள் பிள்ளைகளை குறை சொல்லிவிடக் கூடாது என்று எண்ணும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நல்ல குண நலன் உடன் வளர வேண்டும் என்று எண்ணுவதில்லை. இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமுதாயத்தின் தூண்கள். அந்த தூண்களை சிறுவயதிலிருந்தே நல்லவிதமான பண்புகளை கற்று கொடுத்து வளர்த்தால் தான் அஸ்திவாரம் உறுதியாக இருக்கும். வருங்கால சமுதாயமும் வலிமையாக இருக்கும். என் வீடு, என் மக்கள் என்ற எண்ணம் மாறி நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் வந்தால் மட்டுமே நம் சமுதாயத்தில் மாற்றம் நிகழக்கூடும்.
ர. ஆஃப்ரிடா சுலைஹா பீவி, ஜிஐஓ ஊழியர்.
Pic. Credits: Google
Date: 22nd October, 2021.
Comments